Wednesday, February 3, 2021

உயில் விளம்புகை (Will Probate) செய்வது எப்படி?

மீண்டும் உயில் தொடர்பாக.. பல விஷயங்கள் ஏற்கனவே இங்கு பகிறப்பட்டதுதான்.. 

ஒருவர், தன் வாழ்நாளுக்குப் பின்னர், அவரின் சொத்துக்களை, உயில் மூலம், அவர் விரும்பும் நபருக்கு கொடுக்கலாம்! அப்படி எந்த உயிலும் எழுதி வைக்காமல் அவரின் சொத்தை விட்டுவிட்டு இறந்து விட்டால், அவரின் சட்ட பூர்வ வாரிசுகளுக்குச் சென்று விடும்; உயில் எழுதி வைத்தால், அவர் விரும்பியவருக்கு கொடுத்து விடலாம்; உயில் எழுதாமல் இறந்தால், சட்டபூர்வ வாரிசுகளை அடையும்;
இந்து மதத்தைச் சார்ந்த ஒரு ஆண், அவரின் சொத்தை உயில் எழுதி வைக்காமல் இறந்து விட்டால், அவரின் வாரிசுகளான, அவரின் தாயார் (அப்போது உயிருடன் இருந்தால்), மனைவி, மகன்கள், மகள்கள் இவர்களுக்கு மட்டும் போய்ச் சேரும்; இவர்கள் அனைவருமே முதல்கட்ட வாரிசுகள் ஆவார்கள்; இறந்தவரின் தந்தைக்குப் போகாது; அவர் இரண்டாம் கட்ட வாரிசாக வருகிறார்; முதல் கட்ட வாரிசுகள் யாரும் இல்லை என்றால் மட்டுமே, இரண்டாம் கட்ட வாரிசாக, தந்தை, அவரின் இறந்த மகனின் சொத்து முழுவதையும் அடைவார்; முதல் கட்ட வாரிசுகள் யார் யார் அப்போது உயிருடன் இருக்கிறார்களோ, அவர்கள் அனைவரும் தலைக்கு ஒரு பங்குவீதம் சொத்தை அடைவார்கள்;
இந்து மதத்தைச் சார்ந்த பெண் ஒருவர், தன் சொத்தை விட்டுவிட்டு, உயில் எழுதி வைக்காமல் இறந்து விட்டால், அந்தச் சொத்து, அவரின் கணவர், மகன்கள், மகள்கள் அடைவார்கள்; இந்துமதப் பெண்ணுக்கு குழந்தைகள் இல்லை என்றால், அந்தப் பெண்ணின் சொத்து வேறு மாதிரி வாரிசுகளை அடையும்; அதாவது, (1)அந்த பெண்ணுக்கு குழந்தை இல்லாமல் இறந்து விட்டால், இறந்த பெண்ணின் சொத்து சுய சம்பாத்திய சொத்தாக இருந்தால், அவளின் கணவருக்குப் போய்ச் சேரும்; கணவரும் இல்லையென்றால், கணவரின் வாரிசுகளுக்குப் போய் சேர்ந்துவிடும்; (2)இறந்த பெண்ணுக்கு, குழந்தையும் இல்லாமல், இருந்தால், அவளின் சொத்து, தன் பெற்றோரிடமிருந்து கிடைத்த சொத்தாக இருந்தால், அந்த சொத்து, திரும்பவும் அவளின் தந்தைக்கே போய்ச் சேர்ந்துவிடும்; (3) இறந்த பெண்ணின் சொத்து, கணவரின் தகப்பனாரான மாமனாரிடமிருந்து கிடைத்து இருந்தால், அது அவளின் மாமனாருக்கே போய்ச் சேர்ந்து விடும்; இப்படியாக, குழந்தை இல்லாமல் இறந்த இந்து பெண்ணின் சொத்து மூன்று வகைகளில் அந்தந்த வாரிசுகளை அடையும்;
உயில் எழுதி வைக்காத சொத்துக்கள், அந்தந்த மதச் சட்டப்படி இறந்தவரின் வாரிசைச் சென்று அடையும்; இந்துவுக்கு “இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956” உள்ளது; (இது 2005-ல் திருத்தம் செய்யப் பட்டது); அதுபோலவே, கிறிஸ்தவருக்கு வேறு ஒரு வாரிசு சட்டம் உள்ளது; அதன் பெயர் “இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925”; இதுபோலவே முகமதியர்களுக்கும் (முஸ்லீம்களுக்கும்) ஒரு வாரிசுரிமைச் சட்டம் உள்ளது; அதன் பெயர் “ஷரியத் சட்டம் 1937”;
கிறிஸ்தவர்களுக்கு உள்ள வாரிசுரிமைச்  சட்டமான, இந்திய வாரிசுரிமை சட்டம் 1925-த்தின் படி, கிறிஸ்தவ ஆணோ, பெண்ணோ, உயில் எழுதாமல், சொத்தை விட்டு விட்டு இறந்து விட்டால், அவரின் சொத்து அவரின் கணவர் அல்லது மனைவிக்கு மூன்றில் ஒரு பங்கும், அவரின் பிள்ளைகளுக்கு (மகன்கள், மகள்கள்) மீதியுள்ள மூன்றில் இரண்டு பங்கும் போய்ச் சேரும்; குழந்தைகள் இல்லையென்றால், அடுத்தடுத்த வாரிசுகளை போய் சேரும்;
முகமதியர்கள் வாரிசுரிமைச் சட்டமான ஷரியத் சட்டம் 1937-ன்படி, முகமதியர் ஒருவர், இறந்து விட்டால்,  அவரின் மகன்களுக்கு தலைக்கு இரண்டு பங்கும், அவரின் மகள்களுக்கு தலைக்கு ஒருபங்கும், இறந்தவரின் மனைவிக்கு எட்டில் ஒரு பங்கும் கிடைக்கும்; இதுபோக, மீதியுள்ள பங்குகள் மற்ற பங்காளிகளுக்குக் கிடைக்கும்; சற்று குழப்பமாக இருந்தாலும், அதற்கென்று அந்த சட்டத்தில் சில கணக்குகள் கொடுத்துள்ளனர்;
இந்து மதத்தில் உயில் எழுதுவதை சட்டம் அனுமதிக்கிறது; கிறிஸ்தவ மதத்திலும் உயில் எழுதுவதை சட்டம் அனுமதிக்கிறது; ஆனால் முகமதிய சட்டத்தில் உயில் எழுத முடியாது; ஏனென்றால், முகமதியர்களின் புனித  நூலான குரானின் வாக்குப்படி, ஒருவரின் வாரிசுகளுக்கு சொத்தில் பங்கு இல்லாமல் செய்யும்படி உயில் எழுத முடியாது என்று சொல்லப் பட்டுள்ளது; ஆனாலும், சொத்தை வைத்திருப்பவர், அந்தச் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு சொத்துக்கு உயில் எழுதி வைக்கலாம் என்று சலுகை கொடுக்கப் பட்டுள்ளது; அந்த உயிலை எழுத வேண்டுமானால், அவரின் வாரிசுகள் சம்மதம் கொடுத்திருக்க வேண்டும் என்று கன்டிஷனும் போடப் பட்டுள்ளது; எனவேதான், முகமதியர் உயில் எழுத முடியாது என்று பொதுவாகச் சொல்லி விடுவர்;
இந்து, கிறிஸ்தவர்களுக்கு இந்தக் கட்டுப்பாடு இல்லை; உயிலை எழுதி அவரின் சொத்தை யாருக்கு வேண்டுமானாலும், கொடுத்து விடலாம்; உயில் எப்போதும், அதை எழுதி வைத்தவரின் ஆயுட்காலத்துக்கு பின்னர்தான் அமலுக்கு வரும்; உயிலை எழுதியவர் உயிருடன் இருந்தால் அந்த உயில் நடைமுறைக்கு வரவே வராது; அவர் இறந்த பின்னர்தான் நடைமுறைக்கு வரும்;

ஒருவர் ஒரு உயிலைத்தான் எழுதி வைக்க முடியும்; அடுத்தடுத்து உயில் எழுதி வைத்தாலும், கடைசி உயில்தான் செல்லும்; மற்ற உயில்கள் செல்லாமல் போய்விடும்; ஆனாலும், சிலர், தன்னிடம் உள்ள பல சொத்துக்களை, வேறு வேறு உயில்கள் மூலம் எழுதி, தன் வேறு வேறு பிள்ளைகளுக்கு தனித்தனியே கொடுத்து விடும் வழக்கம் உள்ளது: இது தவறு என்று சொல்வதற்கு ஆட்கள் இல்லை;
உயில் என்றாலே, “அவரின் கடைசி ஆசை” என்றுதான் அதற்குப் பொருள்; உயில் என்பதற்கு ஆங்கிலத்தில் Will என்றே சொல்கின்றனர்; அப்படிப் பார்த்தாலும், அவரின் விருப்பம் என்றுதான் பொருள் வருகிறது; எனவே ஒரு மனிதனுக்கு  ஆசை என்பது கடைசி ஆசை மட்டுமே தன் கடைசி விருப்பமாக இருக்க முடியும்; எனவே ஒருவர் ஒரு உயில் மட்டும்தான் எழுதி நடைமுறைப் படுத்த முடியும்; ஏற்கனவே எழுதிய உயிலை மாற்றி எழுத வேண்டும் என்றால், அந்த உயிலை ரத்து செய்து விட்டு, வேறு ஒரு புதிய உயிலை எழுத வேண்டும்; அல்லது பழைய உயிலை திருத்தம் செய்து மட்டும் வைத்துக் கொள்ளலாம்; இப்படிப் பார்த்தால், ஒரு உயிருக்கு ஒரு உயில்தான் இருக்க முடியும் என்பதே உண்மை;
உயில் எழுதும்போது தனியே தனக்கு மட்டுமே உயில் எழுதிக் கொள்வதே சிறந்தது; கூட்டாக இரண்டு பேர் எழுதும் உயிலில் நிறைய சட்டசிக்கல்கள் வருகின்றன; கணவர் சொத்தை கணவரும், மனைவி சொத்தை மனைவியும் தனித்தனி உயில்கள் மூலம் எழுதிக் கொள்ளலாம்; அதைவிட்டு விட்டு, இருவரும் ஒரே உயிலில் எழுதுவார்கள்; அதில் எழுதும் வாசகங்கள் அந்த கூட்டு உயிலை நடைமுறைப் படுத்துவதில் சட்ட சிக்கலை உண்டாக்கிவிடும்;
இரண்டு பேர் சேர்ந்து கூட்டாக எழுதும் உயிலுக்கு ஜாயிண்ட் உயில் (Joint Will) என்று பெயர்; அதில், கணவர் முதலில் இறந்து விட்டால், கணவரின் சொத்து மனைவிக்குப் போய்ச் சேரும் என்றும், மனைவி முதலில் இறந்து விட்டால், மனைவியின் சொத்து கணவருக்கு போய்ச் சேரும் என்றும் எழுதுவார்கள்; இப்படிப்பட்ட உயிலை கூட்டு உயில் என்று சொன்னாலும், அது உண்மையில் மியூச்சுவல் உயில் (Mutual Will) என்னும் வகையைச் சேர்ந்ததாகும்;
கணவனும் மனைவியும் கூட்டாக வாங்கிய சொத்தை, கூட்டாக ஒரே உயில் எழுதி அந்த சொத்தை தன் வாரிசுகளில் யாருக்காவது கொடுப்பர்: இப்படிப்பட்ட உயிலில், கணவர் முதலில் இறந்தால், அந்த உயில் நடைமுறைக்கு வராது; மனைவி நினைத்தால் அந்த உயிலை ரத்து செய்து விடலாம் என்று சில சட்டத் தீர்ப்புகளும் உள்ளன என்பதால், அந்த குழப்பத்தைத் தவிர்க்கும் பொருட்டு தெளிவாக உயிலை எழுதி வைக்க வேண்டும்;
உயில்களில் எக்சிகியூட்டார்கள் என்னும் நிறைவேற்றாளர்களை நியமித்து இருப்பர்: உயிலை எழுதியவர் இறந்த பின்னர், இந்த உயிலில் சொல்லப் பட்டுள்ள விஷயங்களை எப்படி பிரித்துக் கொடுப்பது என்று ஒரு பொதுவான நபரை அந்த உயிலிலேயே அதை எழுதி வைத்தவர் நியமித்து வைத்து விட்டு போய் இருப்பார்; அவரைத்தான் எக்சிகியூட்டர் (Executor) என்பர்; சொத்துக்காரர் இறந்த பின்னர், அவரின் உயில்படி, அந்த எக்சிகியூட்டர் வந்து, அவரின் சொத்துக்களை கணக்கெடுத்து, அந்த உயிலில் சொல்லி கடன்கள், உயில் எழுதியவரின் இறப்புச் செலவு, உயில் எழுதியவர் யாருக்காவது பணம் கொடுக்கச் சொல்லி இருந்தால் அதைக் கொடுப்பது, அவரின் சொத்துக்களை, அந்த உயிலில் சொல்லி உள்ளபடி பிரித்துக் கொடுப்பது போன்ற பல வேலைகளைச் செய்வார்; அவரே அந்த உயிலுக்கு அதிகாரி; இறந்தவரின் வாரிசுகள் அதில் தலையிட முடியாது;
ஒரு உயிலில் ஒரு எக்சிகியூட்டர் மட்டும் நியமித்திருப்பர்; பொதுவாக இது போதும்; ஆனால் செய்ய வேண்டிய வேலையைப் பொறுத்து இரண்டுக்கு மேற்பட்ட பல எக்சிகியூட்டர்களையும் நியமித்திருப்பார்; அது உயிலை எழுதி வைப்பவரின் விருப்பத்தையும், நம்பிக்கையையும் பொருத்தது: ஒரு எக்சிகியூட்டர் அந்த வேலையை செய்ய விரும்பம் இல்லாமல் இருந்தாலும், மறுத்து விட்டாலும், இறந்து விட்டாலும், மற்ற எக்சிகியூட்டர்கள் இருந்து அந்த வேலையைச் செய்வர்; கூட்டாகவும் செய்வர், தனித்தனியாகவும் செய்வர்; அதை அந்த உயிலில் தெளிவாகச் சொல்லி இருக்க வேண்டும் அவ்வளவே!
எல்லா உயிலிலிலும் எக்சிகியூட்டர் நியமித்து இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; அது உயில் எழுதி வைப்பவரின் விருப்பத்தைப் பொறுத்தது; அப்படி எந்த எக்சிகியூட்டார்களும் நியமிக்கவில்லை என்றால், வாரிசுகளில் யாராவது ஒருவர் அந்த வேலையைச் செய்து கொள்ளலாம், தவறில்லை; எனவே உயிலில் இரண்டு வகை; ஒன்று எக்சிகியூட்டார் நியமிக்கப்பட்ட உயில்; மற்றொன்று எக்சிகியூட்டார் நியமிக்கப்படாத உயில் அவ்வளவே; கோர்ட்டில் ஒரு உயிலை புரபேட் செய்ய மனுச் செய்யும் போது, எக்சிகியூட்டார் நியமிக்கப்பட்ட உயிலில், அவரே மனுச் செய்ய வேண்டும்; எக்சிகியூட்டர் நியமிக்கப்படாத உயிலில், இறந்தவரின் வாரிசுகளில் யாராவது மனுச் செய்ய வேண்டும்;

உயிலை எழுதி வைத்தால் மட்டும் போதாது; அதை சட்டபூர்வமாக ஏற்படுத்தி வைக்க வேண்டும்; உயிலை கையாலும் எழுதி வைக்கலாம்; தட்டச்சு, கம்யூட்டர் பிரிண்ட் மூலமும் ஏற்படுத்தலாம்; எப்படி இருந்தாலும், அது ஒரு பேப்பரில் இருந்தால் போதும்; அதற்கு முத்திரை தீர்வை என்னும் ஸ்டாம்ப் பேப்பர் தேவையே இல்லை! வெறும் வெள்ளைப் பேப்பரில் எழுதி வைக்கலாம்; அதில் ஸ்டாம்ப் ஒட்ட வேண்டிய அவசியமும் இல்லை; அதை ரிஜிஸ்டர் என்னும் பதிவும் செய்து வைக்க வேண்டிய அவசியமும் இல்லை; ஆனாலும், அந்த உயிலைப் பதிவு செய்து வைத்தால் (ரிஜிஸ்டர் ஆபீஸூக்குச் சென்று அந்த உயில் பத்திரத்தை ரிஜிஸ்டர் செய்து வைத்தால்) நல்லது; பின்நாளில் அது மிகுந்த நம்பிக்கைக்கு உரிய பத்திரமாக இருக்கும்; யாரும் ஒரு போலி உயில் என்று குற்றம் சொல்லி விட முடியாது; அதற்காக அந்த உயிலை பதிவு செய்து வைப்பது நல்லது;
ஆனாலும், உயில் எழுதியவர், அந்த உயிலில் உள்ள எல்லாப் பேப்பரின் பக்கங்களிலிலும் அவரின் கையெழுத்தைச் செய்து வைக்க வேண்டும்; கடைசி பக்கத்தில் அவரின் கையெழுத்துக்குக் கீழே கண்டிப்பாக இரண்டு சாட்சிகளின் கையெழுத்தைப் பெற்று இருக்க வேண்டும்; ஒரு உயில் செல்லும் என்று சொல்வதற்கு மிக முக்கியமானதே இந்த இரண்டு சாட்சிகளின் கையெழுத்துத்தான்! உயிலுக்கு சாட்சிகளின் கையெழுத்து அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது; சிலர் வெகு அஜாக்கிரதையாக சாட்சிகள் கையெழுத்தை வாங்காமல் வைத்திருப்பர்; அப்படி இருந்தால், அந்த உயிலே செல்லாமல் போய்விடும்;
இந்த இரண்டு சாட்சிகளும், அந்த உயிலை எழுதியவர் போடும் அவரின் கையெழுத்தை நேரில் பார்த்தவர்களாக இருக்க வேண்டும்; ஒரே நேரத்தில் உயிலை எழுதியவரும், சாட்களும் அந்த உயிலில் கையெழுத்துப் போட்டிருக்க வேண்டும்; இதை சட்டம் கட்டாயப் படுத்திகிறது; இரண்டு சாட்சிகளும் உயில் எழுதியவரின் கையெழுத்து போடுவதை நேரில் பார்க்கவில்லை என்றாலும், அதில் ஒரு சாட்சியாவது கண்டிப்பாக பார்த்திருக்க வேண்டும் என்றும், மற்றொரு சாட்சி, உயில் எழுதியவரின் கையெழுத்தை அறிந்திருக்க வேண்டும் என்றும் சட்டம் சொல்கிறது; இப்படி இருக்கும்போது, பொதுவாக இரண்டு சாட்சிகளுமே நேரில் பார்த்த சாட்சிகளாக இருப்பது மிக நல்லது;
எனென்றால், உயிலை எழுதியவர் இறந்தபின்னர், இந்த சாட்சிகள் இருவர்தான் அந்த உயிலை உண்மையாக எழுதிய உயில் என்று நிரூபிக்க இருக்கும் சாட்சிகள் ஆகும்; வேறு யாருக்கும் தெரியாது, அந்த உயிலை, அதை எழுதியவர்தான் எழுதி வைத்தாரா என்பது; எனவேதான் உயிலுக்கு சாட்சிகள் முக்கியம், முக்கியம் என்று சட்டம் சொல்லிக் கொண்டிருக்கிறது;
அப்படிப்பட்ட சாட்சிகள் எப்படி இருக்க வேண்டும்? நியாயமானவராக இருக்க வேண்டும்; குழப்பவாதியாக இருக்க கூடாது: எதிரியின் பக்கம் சாய்ந்து, பிறழ்ந்து சாட்சி சொல்பவராக இருக்க கூடாது; என்ன நடந்தது என்பதை உண்மையாகச் சொல்பவராக இருக்க வேண்டும்; அப்படியென்றால், சாட்சிகள், பொதுவானவராக இருப்பதுதானே நல்லது!
மேலும், சாட்சிகள் இருவரும் நிரந்தர விலாசத்தில் வசித்து வருபவராகவும் இருக்க வேண்டும்; சாட்சி போட்டவுடன் கண்காணாத இடத்துக்கு போய் சேருபவராக இருந்து விடக் கூடாது; வெளிநாட்டுக்கு ஓடிப் போய்விடுபவராக இருந்து விடக் கூடாது;
மேலும், குறிப்பாக வயதானவராக இருக்கக் கூடாது; உயிலை எழுதியவர் இறப்பதற்கு முன்னரே, அதில் கையெழுத்துப் போட்ட சாட்சி இறந்து விட்டால், யாரை வைத்து அந்த உயிலை நிரூபிப்பது? சிக்கல் வந்துவிடும் அல்லவா? அல்லது உயிலை நிரூபிப்பதற்கு முன்னரே சாட்சி இறந்தாலும் கஷ்டமே! எனவேதான், குறிப்பாக உயிலில் சாட்சிக் கையெழுத்துப் போடுபவர், இளையவராகவே இருக்க வேண்டும்; (ஒவ்வொருவரின் ஆயுளின் விதி என்பது வேறு!); முடிந்தவரை சிறு வயதினராக இருப்பது நல்லது;
மேலும், சாட்சிக் கையெழுத்துப் போடுபவர்கள், அந்த உயிலின்படி பலனை (சொத்தை) அடைபவராக கண்டிப்பாக இருக்கக் கூடாது; அப்படி, அந்த உயிலில் பங்கு வாங்குபவரே சாட்சியாகவும் இருந்தால், அந்த உயிலும் செல்லாது ஆகிவிடும்; எனவே இதில் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும்;
மேலும், உயிலில் சாட்சிக் கையெழுத்துப் போடுபவர், நெருங்கிய உறவினராக இருந்தால் வேறு ஒரு சிக்கல் வரும்; உதாரணமாக, உயிலில் ஒரு மகளுக்குச் சொத்தை கொடுத்திருப்பார்; அதில் சாட்சி போட்டவர், ஒரு மகனாக இருப்பார்; முதலில் அப்பாவுக்காக அரை மனதுடன் சாட்சிக் கையெழுத்துப் போட்டிருப்பார்; அப்பா இறந்தவுடன், அந்த சொத்தில் மகனுக்கும் ஆசை வந்துவிடும்; அப்போது, சொத்தைப் பெறும் மகள், அந்த சாட்சி போட்ட மகனின் சாட்சியத்தை (வாக்குமூலத்தை) பெற வேண்டும்; அப்போது அந்த மகன் உதவுவதற்கு வர மாட்டார்; சாக்குப்போக்கு சொல்வார்; தேவையில்லாமல் திருடன் கையில் சாவி கொடுத்ததைப் போல ஆகிவிடும்; எனவே நெருக்கமான, அல்லது பின்நாளில் வில்லத்தனத்துடன் நடந்து கொள்ளும் நபரின் சாட்சியை இப்போதே பெறாமல் இருப்பது நல்லது!

No comments:

Post a Comment

நில அளவைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ, அல்லது  மனையையோ அளக்க  முற்படும் பொழுது பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புர...