Wednesday, February 3, 2021

இறந்த ஒருவரின் சொத்து அடுத்து யாருக்கு...?


வாரிசுரிமை வழக்கின் தீர்ப்பு...! *1994-5-SCC-761,1999-2-LW-520*
தன்னுடைய தந்தை அல்லது தாயிடமிருந்து சொத்துக்களை பெற்ற ஒரு இந்துப் பெண்ணிற்கு குழந்தைகள் எதுவும் இல்லாமல் இருந்து, அந்த பெண் இறந்துவிட்ட நிலையில், அந்த சொத்துக்களை பெறுவதற்கு இந்து வாரிசுரிமை சட்டப்படி கணவருக்கு உரிமை உள்ளதா...? 
அல்லது அந்த சொத்துக்கள் அந்த பெண்ணின் தந்தை வழி வாரிசுகளுக்கு சென்றடைய வேண்டுமா...? 
இந்துப் பெண்ணின் வாரிசு பற்றிய பொதுவிதிகள் குறித்து இந்து வாரிசுரிமைச் சட்டம் பிரிவு 15 ல் கூறப்பட்டுள்ளது. 
பிரிவு 15(1)ன்படி உயில் எழுதாமல் இறந்து போன இந்துப் பெண் ஒருவரின் சொத்தை, பிரிவு 16 ன் குறிப்பிட்டபடி கீழ்க்கண்ட வாரிசுகள் அடைவார்கள். 
1. முதலாவதாக இறந்த பெண்ணின் மகன்கள் மற்றும் மகள்கள் (முன்னதாக இறந்து போன மகனின் அல்லது மகளின் குழந்தைகள் உட்பட) கணவனும் அடைவார்கள். 
2. இரண்டாவதாக கணவனின் வாரிசுகள் அடைவார்கள்.
3. மூன்றாவதாக தாயும், தந்தையும் அடைவார்கள்.
4. நான்காவதாக தந்தையின் வாரிசுகள் அடைவார்கள்.
5. கடைசியாக தாயின் வாரிசுகள் அடைவார்கள்.
பிரிவு 15(2)ன்படி பிரிவு 15(1) ல் என்ன கூறியிருந்தபோதிலும், 
இந்துப் பெண் ஒருவர் தன்னுடைய தந்தை அல்லது தாயின் வாரிசு என்ற முறையில் அடைந்த சொத்துக்களை, அவளுக்கு மகனோ அல்லது மகளோ (முன்னதாக இறந்து போன மகனின் அல்லது மகளின் குழந்தைகள் உள்ளடங்கலாக) இல்லாதபோது, உட்பிரிவு 15(1)ல் குறிப்பிட்டுள்ள மற்ற வாரிசுகளுக்கு பொருந்தாது. 
ஆனால் தந்தையின் வாரிசுகளுக்கு பொருந்தும்.
அதேபோல் இந்துப் பெண் ஒருவர் தன்னுடைய கணவன் அல்லது மாமனாரின் வாரிசு என்ற முறையில் அடைந்த சொத்துக்களை, அவளுக்கு மகனோ அல்லது மகளோ (முன்னதாக இறந்து போன மகனின் அல்லது மகளின் குழந்தைகள் உள்ளடங்கலாக) இல்லாதபோது, உட்பிரிவு 15(1)ல் கூறப்பட்டுள்ள வாரிசுகள் அடைய மாட்டார்கள். அவளது கணவனின் வாரிசுகள் அடைவார்கள். 
அதேபோல் ஒரு இந்துப் பெண்ணிற்குள்ள வாரிசுகளுக்கிடையே சொத்துக்கள் எப்படி பிரிக்கப்பட வேண்டும் என்று பிரிவு 16 கூறுகிறது. 
மேலே கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தை தெளிவாக படித்துப் பார்த்தால், இந்து வாரிசுரிமை சட்டம் பிரிவு 15(2) யை, பிரிவு 16 எந்த வகையிலும் கட்டுப்படுத்துவதில்லை. பிரிவுகள் 15(1) மற்றும் 15(2) ஆகியவற்றை படித்து பார்க்கும் பொழுது பிரிவு 15(2) ஒரு விதிவிலக்கான சட்டப் பிரிவாக அமைந்துள்ளது தெரிய வரும். 
தன்னுடைய தந்தை அல்லது தாயிடமிருந்து சொத்துக்களை பெற்றிருக்கும் ஒரு இந்துப் பெண் இறந்துவிடும் நிலையில், அந்த சொத்துக்களை எவ்வாறு பிரித்தளிக்கப்பட வேண்டும் என்பதற்கு ஒரு மாறுபட்ட நடைமுறை பிரிவு 15(2) ல் கூறப்பட்டுள்ளது. 
வாரிசுரிமை அடிப்படையில் 
தன்னுடைய தந்தை அல்லது தாயிடமிருந்து சொத்துக்களை பெற்ற ஒரு இந்துப் பெண்ணிற்கு குழந்தைகள் எதுவும் இல்லாமல் இருந்தால், அந்த பெண் இறந்ததற்கு பின்னர், அந்த பெண்ணின் தந்தையுடைய வாரிசுகளுக்கு தான் அந்த சொத்துக்கள் சென்றடையும். மாறாக அந்த சொத்து இறந்து போன பெண்ணின் கணவருக்கு சென்றடையாது. 
இது குறித்து உச்சநீதிமன்றம் “இராதிகா Vs அக்னுராம் மாத்தோ (1994-5-SCC-761) மற்றும் பகவத் ராம் Vs தேஜ் சிங் (1999-2-LW-520)” ஆகிய வழக்குகளில் தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளது. 
எனவே ஒரு இந்துப் பெண் தன்னுடைய தந்தை அல்லது தாயிடமிருந்து சொத்துக்களை பெற்ற அனுபவித்து வரும் நிலையில் குழந்தைகள் ஏதும் இல்லாமல் இறந்து போனால் மேற்படி சொத்துகள் இந்து வாரிசுரிமை சட்டப்படி அந்த இறந்து போன பெண்ணின் தந்தை வழி வாரிசுகளுக்கு தான் சென்றடையும் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

சார்பதிவாளர் அலுவலகத்தில் எப்படி ஒரு உரிமை மாற்று ஆவணங்களை பதிவு செய்கிறோமோ அதேபோல் நீதிமன்றங்கள் வழங்கும் இறுதி உத்தரவு மற்றும் தீர்ப்பாணைகளையும் பதிவு செய்யலாம்.
நீதிமன்றத்தில் நடந்து முடிந்துள்ள பாகப்பிரிவினை வழக்கு தீர்ப்புகளை பதிவு செய்து கொண்டால், ஒரு பாகப்பிரிவினை பத்திரத்திற்கு என்ன மதிப்போ அதே மதிப்பு இதற்கும் உண்டு. அதைபோல் எந்த தீர்ப்பையும் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் இதற்கென்று காலவரம்பு பதிவுச் சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
லட்சுமி என்பவர் சேலம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு பாகப்பிரிவினை வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் முழு விசாரணைக்கு பின்னர் லட்சுமிக்கு ஆதரவாக தீர்ப்பு கூறப்பட்டது. பின்னர் லட்சுமி அந்த தீர்ப்பை பதிவு செய்ய கோரி வாழப்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தை அணுகினார். ஆனால் சார்பதிவாளர் தீர்ப்பு கூறி நான்கு மாதத்திற்குள் பதிவு செய்ய வேண்டும். தாமதமாக பதிவுக்கு வந்தால் ஏற்க முடியாது என்று கூறி தீர்ப்பை பதிவு செய்ய மறுத்து விட்டார். இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் லட்சுமி ரிட் மனு தாக்கல் செய்தார்.
அதனை விசாரித்த நீதிபதி...
பதிவுச் சட்டம் பிரிவு 23 ஆனது ஆவணங்களை தாக்கல் செய்வதற்கான கால அளவு பற்றி கூறுகிறது. மேலும் பதிவுச் சட்டம் பிரிவுகள் 24, 25, 26 ஆகியவைகளுக்கு உட்பட்டு உயில் தவிர மற்ற ஆவணங்களை பதிவு செய்யும் நோக்கத்துடன் அவை எழுதி கையொப்பமிட்ட நான்கு மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பதிவுக்கு ஏற்கக்கூடாது என்றும் இந்த பிரிவு கூறுகிறது.
அதேபோல் பிரிவு 25 ஆனது தவிர்க்க முடியாத தாமதம் ஏற்பட்டது என்றால் அபராதத்துடன் பதிவு செய்யலாம் என்று கூறுகிறது.
இந்த இரண்டு பிரிவையும் கவனமாக படித்து பார்த்தால் பிரிவு 23 ஆனது கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்ற தன்மை கொண்டதாக இல்லை. ஒரு வழிவகையாக தான் இந்த பிரிவு உள்ளது. ஆவணங்களை பதிவு செய்வதில் தவிர்க்க முடியாத கால தாமதம் ஏற்பட்டால் அதை மன்னிப்பதற்கான அதிகாரம் பதிவாளருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் லட்சுமிக்கு தீர்ப்பு நகல் 14.06.2012 ஆம் தேதிதான் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை அவர் 6.9.2012 ஆம் தேதி பதிவுக்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்துள்ளார். ஆனால் சார்பதிவாளர் தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியே கவனத்தில் கொண்டு தவறான புரிதல் காரணமாக பதிவுக்கு மறுத்துள்ளார்.
ஆகையால் சார்பதிவாளரின் உத்தரவை ரத்து செய்வதாக கூறி உத்தரவிட்டார்.
சென்னை உயர் நீதிமன்றம்
W. P. No - 18805/2013
Dt - 28.11.2016
லட்சுமி Vs சார்பதிவாளர், வாழப்பாடி, சேலம்
2017-1-LW-721

No comments:

Post a Comment

நில அளவைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ, அல்லது  மனையையோ அளக்க  முற்படும் பொழுது பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புர...