பொதுவாக வீடுகள், மனைகள் அல்லது இதர வகை நிலங்கள் ஆகியவற்றை வாங்குபவர்கள் அதற்கான ஆவணங்களை பிறரிடம் படிப்பதற்காக தந்து சரியாக உள்ளதை உறுதி செய்து கொள்கின்றனர்.
ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்தி வரும் சொற்கள் அல்லது வாசகங்கள் பலருக்கும் எளிதில் புரிவதில்லை. ஆவணங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளுக்கான விளக்கங்கள் வருமாறு :
கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலப்பகுதி.
கிராம தானம்: கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலம் ஒதுக்கப்படுவது.
தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலம் தானமாக அளிக்கப்படுவது.
இனாம்தார்: பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.
விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு மற்றும் எல்லைகளை குறிப்பது.
பட்டா: சம்பந்தப்பட்ட நிலம் யாருடைய பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வருவாய்த்துறை சான்றிதழ்.
சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் கொண்ட வருவாய்த்துறை ஆவணம்.
அடங்கல்: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு, பயன்பாடு, கிராமம் அல்லது சம்பந்தப்பட்ட ஊரில் உள்ள மொத்த நிலப்பரப்பில் அந்த நிலம் எங்கு அமைந்துள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை சான்று.
நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.
புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.
குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.
ஷரத்து: பிரிவு.
இலாகா: துறை.
கிரயம்: நிலம் அல்லது வீட்டை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணப்படுத்தும் சொல்.
வில்லங்க சான்று: குறிப்பிட்ட ஒரு வீடு மனையின் மீது ஒருவருக்கு உள்ள உரிமை மற்றும் அந்த சொத்து சம்பந்தமாக அவர் மேற்கொண்ட வெவ்வேறு நடவடிக்கைகள் உள்ளிட்ட சகல விதமான விஷயங்களையும் அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.
புல எண்: நில அளவை எண்.
இறங்குரிமை: வாரிசுரிமை.
தாய்ப்பத்திரம்: ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தைய பரிவர்த்தன ஆவணங்கள்.
ஏற்றது ஆற்றுதல்: குறிப்பிட்ட ஒரு பொறுப்பை நிறைவேற்ற அளிக்கப்படும் உறுதி.
அனுபவ பாத்தியம்: குறிப்பிட்ட ஒரு நிலப்பகுதியை நீண்ட காலம் பயன்படுத்தி வந்ததன் அடிப்படையில் பெறப்படும் உரிமை.
சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.
ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்
No comments:
Post a Comment