1. சொத்தின் மதிப்பில் எத்தனை சதவிகிதம், பத்திரம் பதிய செலவாகும்?
பதில்: நீங்கள் என்ன வகை ஆவணம் என்பதை இங்கே குறிப்பிடவில்லை. ஆகையால் விற்பனை ஆவணம் (Sale Deed) என்று எடுத்துக்கொண்டால், அந்தச் சொத்தின் சந்தை மதிப்பில் (அரசு வழிகாட்டி மதிப்பு) 7 சதவிகிதம் முத்திரை கட்டணமாகவும், 1 சதவிகிதம் பதிவுக் கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.
2. சொத்தின் மதிப்பு எவ்வளவுக்கு அதிகமாக இருந்தால், அந்தச் சொத்தை பதிவு செய்ய வேண்டும்?
பதில்: ரூ. 100 க்கு அதிகமான மதிப்பு கொண்ட அசையாத சொத்துகள் அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும்.
3. குறிப்பிட்ட மதிப்புக்கு கீழ் இருந்தால், மனையை பதிவு செய்ய கட்டணம் கிடையாது என்று என் நண்பன் சொன்னான். அந்தத் தொகை எவ்வளவு என்று குறிப்பிட முடியுமா?
பதில்: ஆம், அந்தக் குறிப்பிட்ட தொகை ரூ. 25,000.
4. நான் வாங்கப் போகிற மனையின் அரசு மதிப்பு சதுர அடி ரூ. 1,000. சந்தை விலை ரூ. 500. எந்த மதிப்புக்கு நான் பத்திரம் பதிவு செய்ய வேண்டும்?
பதில்: நீங்கள் அரசு வழிகாட்டி மதிப்புக்குத்தான் ஆவணத்தைப் பதிவு செய்ய வேண்டும். ஆனால் நீங்கள் குறைந்த மதிப்பிற்குப் பதிவு செய்திருந்தால் சார் பதிவாளர் அந்த ஆவணத்தை, சிறப்பு துணை மாவட்ட ஆ ட்சியர் (முத்திரைத்தாள்) அலுவலகத்திற்கு அந்தச் சொத்தின் சந்தை மதிப்பை அறிய அனுப்பி வைப்பார். அவர் கண்டறிந்த மதிப்பும் நீங்கள் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள மதிப்பும் ஒன்றாக இருந்தால், உங்கள் ஆவணம் உங்களிடம் ஒப்படைக்கப்படும். ஒருவேளை அந்த மதிப்பு நீங்கள் குறிப்பிட்டுள்ள மதிப்பை விட அதிகமாக இருந்தால், கூடுதல் மதிப்புக்கு முத்திரை, பதிவு கட்டணம் நீங்கள் தனியே செலுத்த வேண்டியிருக்கும். மேலும், சில நேரங்களில் அப்போதைய சந்தை நிலவரத்தை வைத்து சந்தை மதிப்பை சிறப்பு துணை மாவட்ட ஆட்சியர் அரசு வழிகாட்டி மதிப்பை விட அதிகமாகக் கணக்கிட வாய்ப்பும் உள்ளது.
5. கடந்த 5 வருடங்களுக்கு முன் வீட்டு மனை ஒன்று வாங்கினேன். அதனை இப்போது விற்க முயற்சிக்கும் போது சர்வே எண் தவறாக எழுதப்பட்டுள்ளது. இதற்கு திருத்தல் பத்திரம் போட வேண்டும் என்கிறார்கள். 2010-ல் சதுர அடி அரசு மதிப்பு 1000 ரூபாய். இப்போது ரூ. 2,000. வித்தியாசப்படும் தொகைக்கு முத்திரைத் தீர்வை பதிவு கட்டணம் அலுவலகத்தில் கட்டச் சொல்கிறார்கள். இந்தத் தொகையை எனக்கு தவறாக பதிவு செய்து கொடுத்த எனக்கு இடத்தை விற்றவரிடம் கேட்க முடியுமா?
பதில்: பதிவு செய்யப்பட்ட ஆவணத்தில் எந்தத் திருத்தம் செய்யப்படுவதாக இருந்தாலும் பிழை திருத்தல் ஆவணம் மூலம் தான் செய்யப்படும். எல்லா பிழை திருத்தல் ஆவணத்திற்கும், அதிலுள்ள கவனக்குறைவால் ஏற்பட்ட பிழைகளுக்காக கூடுதல் முத்திரை வரியோ கட்டணமோ வசூலிக்கப்பட மாட்டாது. ஆனால் தாய் பத்திரத்தில் சர்வே எண் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தாலும் கூட நான்கு எல்லைகள், பரப்பளவு, அமைவிடம் ஆகிய மற்ற குறிப்பிட்ட விஷயங்கள் தாய் பத்திரத்தில் உள்ளபடியே இருந்தால், பிழை திருத்துவதற்கு ரூ. 200 முதல் 300 வரை செலவாகலாம். ஒருவேளை ஆவண மதிப்பில் உள்ள புதிய விகிதப்படி சார் பதிவாளர், கூடுதல் முத்திரை கட்டணத்தை கட்ட சொன்னால், நீங்கள் உயர் அதிகாரிகளிடம் மேல்முறையீடு செய்யலாம். உங்களுக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
6. புதிதாக ஃபிளாட் பதிவு செய்யும்போது, பத்திரப் பதிவுக்கு என்னென்ன கட்டணங்கள் செலுத்த வேண்டி இருக்கும்? விரிவாக விளக்கவும்.
புதிய ஃபிளாட்டுக்கு, முதலில் நீங்கள் கட்டுமான உடன்படிக்கைப் பத்திரத்தைப் பதிவு செய்ய வேண்டும். அதற்கு கட்டட மதிப்பில் 1 சதவிகிதம் முத்திரை கட்டணமாகவும், 1 சதவிகிதம் பதிவு கட்டணமாகவும் செலுத்த வேண்டும். பின்னர், பிரிபடாத மனை விற்பனை ஆவணத்தைப் பதிவு செய்ய வேண்டும். இதற்கு பிரிபடாத மனை (யூடிஎஸ்) வழிகாட்டி மதிப்பில் 7 சதவிகிதத்தை முத்திரை கட்டணமாகவும் 1 சதவிகிதத்தைப் பதிவு கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.
7. நான்கு வருட பழைய அடுக்குமாடி குடியிருப்பை வாங்குகிறேன். வீட்டின் பரப்பு 1000 சதுர அடி. யூடிஎஸ் 600 சதுர அடி. வீட்டை 35 லட்ச ரூபாய்க்கு வாங்குகிறேன். எனக்கு பத்திரப் பதிவுக்கு எவ்வளவு செலவாகும்?
நீங்கள் வாங்கும் கட்டடம் எவ்வளவு பழையதாக இருந்தாலும், பொதுப்பணி துறையினர் வழங்கியுள்ள மதிப்பின் அடிப்படையில் உங்கள் கட்டடம் மதிப்பிடப்படும். இந்த மதிப்பு ஒவ்வொரு வருடமும் இவ்வாறு கணக்கிடப்படும். இதன் விவர அட்டவணை சார் பதிவாளரிடம் இருக்கும். இதன்படி சொத்தின் தற்போதைய மதிப்புக்கு 7% முத்திரை கட்டணமும் 1% பதிவு கட்டணமும் செலுத்த வேண்டும்.
முதலில் நீங்கள் அந்த நிலத்தின் பிரிபடாத பங்கின் அரசு வழிகாட்டி மதிப்பையும் அந்தக் கட்டத்தின் ஒரு சதுர அடிக்கான விலையையும் கேட்டு அறிந்து அதற்கேற்ப பத்திரத்தை உருவாக்க வேண்டும். அந்த பழைய ஃப்ளாட்டை பதிவிற்கு பின் சார் பதிவாளர் நேரில் வந்து சோதனை செய்வார். அவர் இடும் மதிப்பு ஆவண மதிப்பை விட கூடுதலாக இருந்தால் அதற்கு எவ்வளவு கூடுதல் முத்திரை கட்டணம், பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை சொல்வார். மதிப்பு சரியாக இருந்தால் ஆவணத்தை அப்படியே திருப்பி தருவார்.
8. என் பெயரில் இருக்கும் சொத்தை என் மனைவிக்கு தானமாக கொடுக்க விரும்புகிறேன். சொத்தின் மதிப்பு ரூ. 40 லட்சம். என் மனைவியின் பெயருக்கு சொத்தை மாற்ற எவ்வளவு செலவாகும்?
அசையாத சொத்து மனைவி பெயருக்கு மாற்றப்படும்போது, அதன் மதிப்பு ரூ 40 லட்சமாக இருந்தால் ரூ. 25,000 முத்திரை கட்டணமாகவும், ரூ. 5,000 பதிவுக் கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.
9. நான் வாங்கும் சொத்துக்கு அரசு வழிகாட்டி மதிப்பு, சந்தை மதிப்பை விட இரு மடங்கு அதிகமாக இருக்கிறது. இதனை குறைத்து, சரியான சந்தை மதிப்பில் பத்திரம் பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும்?
பதில்: 4வது கேள்விக்கான பதிலை பார்க்கவும்.
10. நான் புதிதாக ஒரு வீடு வாங்க இருக்கிறேன், வீட்டின் மதிப்பு 50 லட்சம் ரூபாய். இதற்கு முத்திரை மற்றும் பதிவுக் கட்டணமாக சொத்து மதிப்பில் 12 சதவிகிதம் பில்டர் கேட்கிறார். சரி தானா?
பதில்: 50 லட்சம் ரூபாய் மதிப்புடைய வீட்டுக்கு முத்திரைக் கட்டணம் 3,50,000 ரூபாய், பதிவுக் கட்டணம் 50,000 ரூபாய் மட்டுமே.
11. நான் 28 வருடங்களுக்கு முன் ஒரு வீட்டை என் பெயரில் வாங்கினேன், தற்போது என் மகனின் பெயருக்கு அதை மாற்றி பதிவு செய்ய வேண்டும் அதற்கு என்ன நடைமுறைகள் என்று விளக்கவும்? அதோடு எவ்வளவு செலவாகும் என்பதையும் குறிப்பிடவும்.
பதில்: உங்கள் பெயரில் உள்ள வீட்டை உங்களுடைய மகன் பெயருக்கு மாற்ற தான ஏற்பாடு பத்திரம் எழுதி பதிவு செய்ய வேண்டும். இதற்கு முத்திரைக் கட்டணம் தற்போதைய சந்தை மதிப்பில் 1 சதவிகிதமாக இருக்கும். ஆனால், இந்த கட்டணம் அதிகபட்சம் 25,000 ரூபாய் மட்டுமே. இதைத் தவிர்த்து சொத்து மதிப்பில் 1 சதவிகிதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். இதன் அதிகபட்சம் 5,000 ரூபாய் மட்டுமே.
12. சொத்து பதிவு மற்றும் முத்திரைக் கட்டணம் யாருக்கு செல்கிறது. இதனால், பொது மக்களுக்கு என்ன நன்மை?
பதில்: முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணம் அரசின் வருவாய்க்கு செல்கிறது. இது பொது நோக்கங்களுக்காக வரவு-செலவு திட்டம் (பட்ஜெட்) மூலம் செலவழிக்கப்படுகிறது.
13. நில மோசடிகளில் கிரிமினல் வழக்கு எப்படி தொடுப்பது? எந்தெந்த சட்டப் பிரிவுகளில் தொடுப்பது?
பதில்: நில மோசடி, நில அபகரிப்பு ஆகியவற்றில் இந்திய தண்டனைச் சட்டம் 420 (மோசடி)பிரிவு 120 பி (குற்றச்சதி), பிரிவுகள் 405, 406 (நம்பிக்கை மோசடி), பிரிவுகள் 441, 447 (குற்ற ஆக்கிரமிப்பு), பிரிவுகள் 465, 466, 468 (ஃபோர்ஜரி) பிரிவுகள் 472, 473, 474, 475, 476 (போலி உருவாக்கல்), 416, 419 (ஆள்மாறாட்டம்), பதிவுச்சட்டம் பிரிவு 81, 82, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் ஆகியவற்றின் கீழ் முதலில் காவல் நிலையத்தில் புகார் செய்து முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகாரை சமர்ப்பித்து வழக்கு தொடர்ந்தால் அவர் அதை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அருகில் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைப்பார்.
14. நான் ஒரு ஆவணத்தைக் கையெழுத்து வாங்கி உடனடியாக பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது. இந்த ஆவணம் எதுவரை செல்லுபடி ஆகும்?
ஒரு ஆவணத்தில் தேதி குறிப்பிட்டு கையெழுத்துப் போட்டுவிட்டால் நான்கு மாதங்களுக்குள் சார் பதிவாளர் முன்பாக பதிவுக்கு தாக்கல் செய்யவேண்டும். இயலாதவர்கள் அரசு விதித்த விகிதச்சாரப்படி அபராதம் கட்டி மேலும் நான்கு மாத காலம் முடிவதற்குள் தாக்கல் செய்துகொள்ளலாம். ஆவணத்தை எழுதிக்கொடுத்தவர்களில் எவராவது சார் பதிவாளர் முன்பு தோன்றி ஒப்புதல் கையெழுத்து செய்யவும், ரேகை பதிவு செய்யவும் இயலாவிட்டால் மேலும் நான்கு மாதங்கள் அபராதம் கட்டுவதன் மூலம் காலத்தை நீட்டிக்கலாம். எனவே ஆவணத்தைத் தாக்கல் செய்வதற்கு எட்டு மாதங்களும் சார் பதிவாளர் முன்பு தோன்றுவதற்கு நான்கு மாதங்களும் ஆகமொத்தம் ஒரு ஆவணத்தின் ஆயுள் ஒரு ஆண்டு காலம் ஆகும். கையெழுத்து போடப்பட்டு எட்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் சார் பதிவாளர் தாக்கல் செய்யப்படாத ஆவணம் செல்லாமல் போய்விடும். அதே போல் சார் பதிவாளர் முன் தாக்கல் செய்யப்பட்ட பின் நான்கு மாதங்களுக்குள் கையெழுத்திட்ட அனைவரும் வந்து ஒப்புதல் கையெழுத்து, கைரேகை இடுதல் முதலியன செய்யாவிட்டால் ஆவணம் பதிவு செய்ய மறுக்கப்பட்டு திருப்பி அளிக்கப்படும்.
15. பதிவு செய்த விற்பனை ஆவணத்தை ரத்து செய்ய முடியுமா?
பதிவு செய்த ஆவணத்தை ஒருதலைபட்சமாக விற்பவர் மட்டும் வந்து ரத்து செய்ய இயலாது. விற்றவர், வாங்கியவர் இருவரும் வந்து ரத்து செய்தாலும் கூட அந்த ரத்து முறைப்படியான மறுவிற்பனை ஆவணத்தின் மூலமே செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் மேற்படி பதிவானது, சட்டப்படி நடைமுறைப்படுத்தப்படாது என்று ஆவணத்தில் மேற்குறிப்பு செய்யப்படும்.
16. நில அபகரிப்பைப் பற்றி காவல் துறையில் புகார் செய்யும்போது சிவில் கேஸ் என்று சொல்லி சிவில் கோர்ட்டுக்கு போங்கள் என்று சொல்கிறார்கள், இது சரியா?
பதில்: சில நிகழ்வுகளில் இது சரியாக இருக்கலாம். ஒரு சொத்தின் மீது பங்காளி சண்டை இருந்தால் அந்தச் சொத்தின் மீது உரிமையுள்ள ஒருவர் தனக்கு மட்டும் நிலத்தை அபகரித்துக்கொண்டு மற்றவர்களை விரட்ட முயற்சி செய்தால் அதில் யாருக்கு உண்மையான உரிமை உள்ளது என்பதை சிவில் நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் சம்பந்தமில்லாத ஒருவர் உங்கள் சொத்தை ஃபோர்ஜரி, ஆள்மாறாட்டம், போலி ஆவணம் முதலிய வழிகளில் அபகரிக்க முயற்சிக்கும்போது அது முழுக்க முழுக்க கிரிமினல் குற்றம் ஆகும்.
17. மைனர் சொத்தை அவரது தந்தை அல்லது காப்பாளர் விற்பனை செய்தால் வாங்கலாமா?
இளையவர் சொத்தை நீதிமன்றத்தின் அனுமதியோடுதான் விற்பனை செய்ய முடியும். அதே போல் அறக்கட்டளைகள் சொத்தையும் நீதிமன்ற அனுமதியோடுதான் விற்பனை செய்ய முடியும்.
18. என் வீட்டின் உண்மையான மதிப்பு 32 லட்சம் தான் ஆனால் சந்தை விலை 41 லட்சமாக கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த பிரச்னையை யாரிடம் சொல்லி புரிய வைத்து என் வீட்டின் மதிப்பை குறைத்து பதிவு செய்ய முடியும்?
விடை கேள்வி 4-ல் கொடுக்கப்பட்டுள்ளது.
19. இரண்டு மாதங்களுக்கு முன், என் வீட்டின் சந்தை மதிப்பை விட 5 லட்சத்திற்கு கூடுதலாக பதிவு மற்றும் முத்திரைக் கட்டணத்தை செலுத்திவிட்டேன். இதை திரும்பப் பெற வழி இருக்கிறதா?
நீங்களாக முன் வந்து வற்புறுத்தலின்றி செலுத்தியிருந்தால் அதைத் திரும்பப் பெற சாத்தியமில்லை. மாறாக வலியுறுத்தலின் பேரில் எதிர் உணர்வின் அடிப்படையில் (under protest) செலுத்தியிருந்தால் மேலதிகாரிக்கு முறையீடு செய்து திருப்புத் தொகை (refund) பெறலாம்.
20 என் மனைவியின் அப்பா எனக்கு 10 சென்ட் வீட்டு மனையை தருவதாக சொல்கிறார். இதற்கு நான் எப்படி முத்திரை மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும்?
உங்கள் மனைவியின் பெயரிலோ அல்லது உங்கள் பிள்ளைகள் பெயரிலோ சொத்தை எழுதிக்கொடுப்பதாக இருந்தால், கேள்வி 8-க்கான பதிலை பார்க்கவும்.
உங்களுக்கு நேரடியாக எழுதிக்கொடுப்பதாக இருந்தால் கேள்வி 1-க்கான பதிலைப் பார்க்கவும்.
21. அரசு மதிப்பை விட மனையின் சந்தை விலை குறைவாக இருந்தால், எந்த மதிப்புக்கு நான் பதிவு செய்வது?
கேள்வி 4-க்கான பதிலைப் பார்க்கவும்
22.பதிவு செய்த விற்பனை ஆவணத்தை ரத்து செய்ய முடியும் என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.. கட்டிய முத்திரை மற்றும் பதிவு கட்டணம் திரும்பக் கிடைக்குமா?
ஒரு ஆவணம் பதிவு செய்யப்பட்டுவிட்டால் முத்திரைத்தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் திருப்பி தரப்பட மாட்டாது. ஆவணம் பதிவு செய்யப்படாமல் நிலுவை ஆவணமாக வைக்கப்பட்டு அப்படியே திருப்பி பெறப்பட்டால் முத்திரைத்தீர்வை பதிவுக் கட்டணத்திற்கு திருப்பு தொகை பெறலாம்.
23.பத்திரப் பதிவிற்கு செல்லும்போது சார்பதிவாளர்கள் அதைக் கொண்டு வா? இதை கொண்டு வா என்று அழைக்கழிக்கிறார்கள். பதிவிற்கு நாம் என்னென்ன கையில் கொண்டு செல்ல வேண்டும்?
அ. தயாரிக்கப்பட்ட ஆவணம்
ஆ. வீடு இருந்தால் அதன் முழு விவரம் அடங்கிய படிவம், வரைபடம், மனைப்பிரிவின் அங்கீகாரம் பெற்ற நிலப்படம்.
இ. ஆவணதாரர்களின், சாட்சிகளின் புகைப்பட அரசு/அரசுசார்பு அடையாள அட்டைகள் அசலில் மற்றும் சீராக்கப்படிவத்துடன்.
ஈ. பதிவுக் கட்டணம் ரூ. 1000/-க்கு மேல் இருந்தால் கேட்பு காசோலை, முத்திரைத் தீர்வை இட்டது குறைவாக இருப்பின் குறைவுத் தொகை ரூ. 1000/-க்கு மிகுமானால் அதற்கான கேட்பு காசோலை
உ. ஆவணரதாரர்களை நன்கு அறிந்த இரண்டு சாட்சிகள் (சாட்சிகளை அழைக்காது சென்றுவிட்டு யாரிடமாவது ரூ. 50, ரூ 100 கொடுத்து சாட்சி கையெழுத்து போட வைக்க வேண்டாம். ஏனெனில் பின்னர் சொத்துப் பிரச்சனை வந்தால் சாட்சி சொல்ல ஆளைத் தேடிப் போனால் கிடைக்கமாட்டார்கள். கிடைத்தாலும் சாட்சி சொல்ல ரூ. 1 லட்சம் கொடு ரூ. 2 லட்சம் கொடு என்று கேட்ட முன் உதாரணங்கள் உண்டு)
ஊ. தாய்ப்பத்திரங்கள் அல்லது தாய்ப்பத்திரங்கள் வங்கியில் இருப்பின் அதற்கான வங்கிச்சான்று மற்றும் தொலைந்து போயிருந்தால் அதற்கான காவல்துறை சான்று
எ. விவசாய நிலம் என்றால் அரசு வழங்கிய பட்டா முதலிய வருவாய்த்துறை சான்றுகள்
ஏ. வீடு என்றால் விற்பவர், எழுதிக்கொடுப்பவர் பெயரில் உள்ள சொத்துவரி முதலிய விவரங்கள்.
ஐ. வாரிசு முறைப்படி சொத்து வந்திருந்தால் சொத்து உரிமையாளரின் வாரிசு இவர்தான் என்பதை நிலைநாட்ட வாரிசுச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ்
ஒ. சொத்து பற்றிய நடப்பு வில்லங்கச் சான்று விற்பவர், எழுதிக்கொடுப்பவர் பெயரில் இருக்க வேண்டும் (கடந்த 10 நாட்களுக்குள் வாங்கி இருக்க வேண்டும்)
ஓ. ஆலய, வக்பு நிலம் என்றால் தடையின்மைச் சான்று (NOC)
ஒள. விவசாய நிலம் மனைப் பிரிவு ஆக்கப்படுமானால் மாவட்ட ஆட்சியரின் தடையின்மை சான்று
ஃ. மனைப்பிரிவுக்கான DTCP/CMDA ஏற்பளிப்பு.
அஅ. ஆவணதாரர்களில் வயோதிகம் காரணமாக வர இயலாதவர்கள் மருத்துவமனைகளில் உள்ளவர்கள் பொருட்டு பதிவாளர் அங்கே வர வேண்டுமென்றால் முன்பே மருத்துவர்களிடம் சான்று பெற்று உரிய கட்டணம் செலுத்தி பதிவாளரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்று இருக்க வேண்டும்.
அஆ. குறைவு முத்திரைத் தீர்வை செலுத்த வேண்டுமென்றால் அதற்கு தனியான விண்ணப்பம்
அஇ. இரண்டாம், மூன்றாம் படி ஆவணங்கள் (Duplicate,Triplicate) பதிவு செய்ய தனியே விண்ணப்பம்.
அஈ. ஆவணதாரர்களில் எவரேனும் பதிவு அன்று வர இயலாவிட்டால் அவர்களுக்காக ஆவணத்தை (வந்தவர்கள் பொறுத்து பதிவை முடித்து) நிலுவையில் வைக்க தனியே விண்ணப்பம்.
அஉ. பொது அதிகார ஆவணத்தின் மூலம் பதிவு செய்ய வரும்பொழுது பொது அதிகாரம் வழங்கிய முதல்வர் (பிரின்சிபால்) உயிரோடிருக்கிறார் என்பதற்கான சான்று.
24. எனக்கு கிரயம் எழுதிக்கொடுத்தவர் எழுதிக்கொடுத்த பின் பின் வாங்குகிறார். என்ன செய்வது?
எழுதிக்கொடுத்தவர் திடீரென பின்வாங்கினால் பதற வேண்டாம். ஆவணத்தை எழுதி வாங்கியவர் அதைத் தாக்கல் செய்து வராமலிருப்பவருக்கு அழைப்பானை அனுப்பும் "கட்டாயப் பதிவு" என்று அழைக்கப்படும் நடைமுறையைப் பின்பற்றலாம். இதில் எழுதிக்கொடுத்தவர் சார் பதிவாளர் முன்பு வந்து எழுதிக்கொடுத்தது உண்மைதான் ஆனால் இப்பொழுது எனக்கு விற்க சம்மதமில்லை அல்லது கூடுதல் தொகை வேண்டும் என்று கேட்பாரானால் அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் ஒப்புதல் கையெழுத்து போடாமலேயே ஆவணத்தைப் பதிவு செய்து வில்லங்கச் சான்றில் இடம்பெறச் செய்ய சட்டத்தில் வழி உள்ளது.
25. உயிலை எழுதி வைத்தவர் அதனை பதிவு செய்யாமலேயே இறந்துவிட்டார். அதனை தற்போது பதிவு செய்ய இயலுமா?
உயில் மட்டுமல்ல கிரயம் போன்ற ஆவணங்களைக் கூட எழுதிக்கொடுத்தவர்கள் இறந்துவிட்டால் அவர்களது சட்டபூர்வமான வாரிசுகள், சாட்சிகள், ஆவண எழுத்தர் முதலியவர்களை அழைத்து விசாரித்து ஆவணம் இறந்து போனவரால்தான் எழுதிக்கொடுக்கப்பட்டது என்பது குறித்து பதிவாளர் மனநிறைவடைந்தால் அந்த உயிலையோ அல்லது கிரய ஆவணத்தையோ பதிவு செய்து வில்லங்கச் சான்றில் ஏற்ற முடியும்.
26. வில்லங்கம், வில்லங்கச் சான்று என்று சொல்கிறார்களே அப்படியென்றால் என்ன?
உங்கள் அசையாச் சொத்தின் மீது எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் வில்லங்கக் குறிப்பு என்றே அழைக்கப்படும். அது வில்லங்கச் சான்றில் குறிக்கப்படும். உதாரணமாக உங்கள் தந்தை பூர்விகமாக அனுபவித்து வந்த ஒருவரிடமிருந்து அறுபது ஆண்டுகளுக்கு முன் சொத்து ஒன்றை வாங்கியிருந்தால் அந்தக் குறிப்பும் அதன் பின் உங்கள் தந்தையார் வாங்கிய கடன் மீதான அடைமானம், அது செல்லடித்ததற்கான ரசீது அனைத்தும் பதிவு செய்யப்பட்டால் வில்லங்கச் சான்றில் இடம்பெறும். இதே சொத்தை அவர் உங்களுக்கு தான பத்திரம் எழுதி கைமாற்றிக்கொடுத்திருந்தால் அதுவும் வில்லங்கச் சான்றில் இடம்பெறும். எனவே சொத்தின் உரிமையாளருக்கு தெரியாமல், அவர் சம்மதம் இல்லாமல் சொத்தின் மீது எதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அதுதான் உண்மையான வில்லங்கம் ஆகும். மற்றவையெல்லாம் சாதாரண பதிவு குறிப்புகளே. எனவே வில்லங்கச் சான்றை பதிவு குறிப்பு சான்று என்று அழைப்பதே சரி.
No comments:
Post a Comment